தூத்துக்குடி சிவன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளான சூரசம்ஹாரம் வரும் 15-ஆம் தேதியும், திருக்கல்யாண உற்சவம் 16-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் () கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்க கட்டளை சார்பில் நேற்று (நவம்பர் 9) மாலை சிறப்பு பூஜைகளுடன் காப்புக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 7:25 மணிக்குக் கும்ப ஜெபத்துடன் கந்தசஷ்டி விழா முறைப்படி தொடங்கியது. காலை 10:25 மணிக்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு மஞ்சள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், விபூதி உட்பட 51 வகையான சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தைத் தொடர்ந்து மதியம் 12:00 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனையின் போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா", "கந்தவேல் முருகனுக்கு அரோகரா" எனப் பக்தி கோஷங்களை முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலான சங்கம் தலைவர் எஸ் பிரம்மநாயகம், செயலாளர் எம்எஸ்எஸ் கந்தப்பன் பிள்ளை, துணைத்தலைவர் இராமலிங்கம், உதவி செயலாளர் எஸ் தியாகராஜன் சிவன் கோவில் அறங்காவலர் பிஎஸ்கே ஆறுமுகம் பால சரஸ்வதி சிட்பண்ட்ஸ் அதிபர் பாலசுப்பிரமணியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Kanthasastisivan3.jpg

மாலை நேரத்தில் இரண்டாம் யாககால பூஜையும், அதனைத் தொடர்ந்து இரவு சுப்பிரமணிய சுவாமி வீதிஉலா, எதிர்சேவை மற்றும் ஆறுமுக அர்ச்சனையும் நடைபெறுகின்றன. நவம்பர் 15 மதியம் 12:15 மணிக்கு ஆறுமுக அர்ச்சனை, மாலை 4:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி மற்றும் 4:25 மணிக்குச் சிகர நிகழ்வான சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன. சூரசம்ஹாரம் முடிந்ததும் 6 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பானகம் அருந்தி விரதத்தை நிறைவு செய்வர்.

நவம்பர் 16 காலை 7:05 மணிக்கு ஸ்ரீ தெய்வானை அம்பாள் தபசு மண்டபத்திற்கு எழுந்தருளுவார். மாலை 4:25 மணிக்குச் சுப்பிரமணிய சுவாமி தபசு மண்டபம் முன் காட்சி கொடுத்து, மாலை 6:05 மணிக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8:00 மணிக்குக் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் திருமாங்கல்யம் பூட்டுதல் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

Sasticrowd.jpg

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கோவில் கலையரங்கில் நவம்பர் 9 முதல் 19-ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு 'ஞானத்திரள்' ஆசிரியர் செந்தமிழரசு சிவக்குமாரின் பக்தி சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

இவ்விழா ஏற்பாடுகளைக் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், சண்முகம் மற்றும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்க நிர்வாகிகள், சிவன் கோவில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாகச் செய்துள்ளனர்.