கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பித் தொந்தரவு தருவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாகத் தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஆபாச மெசேஜ் அனுப்பித் தொந்தரவு தருவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பேரதிர்ச்சியை அளிப்பதாக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான திருமதி கீதாஜீவன் காரசாரமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"கள்ளக்குறிச்சி த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி, அவரது இருப்பிடத்துக்கே சென்று தொந்தரவு செய்வதாகச் சொல்லப்படும் தகவல்கள் பேரதிர்ச்சியைத் தருகிறது. இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவது தமிழ்நாட்டிற்கு நேர்ந்திருக்கும் மிகப்பெரிய தலைகுனிவு ஆகும்.

இத்தகைய தீவிரமான விவகாரத்தில் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டிய காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்? மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்திய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

'நமக்கு நாமே' என்பது போல் தவெக ஆட்சியில் நம்மையும் நம் பிள்ளைகளையும் நாம்தான் பாதுகாத்திட வேண்டும் என்ற அவலநிலை உருவாகியிருப்பது பெரும் வேதனையளிக்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.