தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே வாகனத்தை மெதுவாக ஓட்டிச் செல்லுமாறு கூறி ஏற்பட்ட தகராறில், இரு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய கும்பலைச் சேர்ந்த 15 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி முத்தையாபுரம் துறைமுகச்சாலையில் உள்ள தங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த காசிராஜன் மகன் பால்ராஜ் (20) மற்றும் பட்டுராஜ் மகன் தினேஷ்குமார் (19) ஆகிய இருவரும் தெர்மல்நகர் கடற்கரைக்குச் சென்றுவிட்டு மீண்டும் தங்கம்மாள்புரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது துசை நகர் பகுதியில் வந்தபோது, அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் "எங்கள் ஏரியாவில் வண்டியை மெதுவாக ஓட்டிச் செல்ல வேண்டும்" என்று கூறிச் சத்தம் போட்டுள்ளனர்.

தொடர்ந்து, துசை நகரைச் சேர்ந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல், அந்த இளைஞர்களைப் பின்தொடர்ந்து சென்று தங்கம்மாள்புரத்தில் உள்ள அவர்களின் வீட்டின் முன்பாக வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அக்கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பால்ராஜ் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவரையும் கொடூரமாக வெட்டியுள்ளது.

இத்தாக்குதலில் இருவருக்கும் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் வன்முறையில் ஈடுபட்ட சூசை நகரைச் சேர்ந்த 15 பேரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள எஞ்சிய 5 பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.