தூத்துக்குடி அருகே உணவுக்குப் பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளரை மிரட்டி, ஓட்டலை அடித்து நொறுக்கிச் சூறையாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (48). இவர் அங்குள்ள மங்களகுறிச்சி விலக்கில் ஓட்டல் மற்றும் பேக்கரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது ஓட்டலுக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. மேலும் அவர்கள் சிக்கன் பிரைடு ரைஸ் 4 வேண்டும் என ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளனர். அதற்கான பணத்தை ஓட்டல் ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

ஆனால், அதற்குப் பணம் தர மறுத்த அந்த 4 பேர் கும்பல், ஓட்டல் மற்றும் பேக்கரியில் இருந்த பிரிசர், கண்ணாடி பொருட்கள், பேக்கரி பொருட்கள், ஷோகேஸ் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிச் சூறையாடியது. இதனைத் தடுக்க வந்த செல்வக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாகச் செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த மகராஜன் மகன் முத்து மாரியப்பன் (24), சிலுக்கன்பட்டி அகஸ்டின் மோசஸ் மகன் யோசுவா துரைசிங் (20), உத்திரகுமார் மகன் தினேஷ் (19)ஆகிய 3 பேரைப் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெய்சன் என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.