தமிழ்நாடு அரசு பதிவுத்துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் 'ஸ்டார் 3.0' திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி தூத்துக்குடியில் பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) முழு அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்டுள்ள 'ஸ்டார் 3.0' திட்டம், சொத்து மற்றும் பத்திரப்பதிவு துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் திட்டமாகும். இதன் மூலம் காகிதமில்லா பதிவுகள் மற்றும் நேரில் வராத ஆன்லைன் பதிவுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. குறிப்பாகச் செட்டில்மெண்ட், விடுதலைப் பத்திரம், குடும்ப ஏற்பாடு உள்ளிட்ட 4 வகையான குடும்ப சொத்து பத்திரப்பதிவுகள் கட்டாய டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

இப்புதிய திட்டத்தினால் பொதுமக்கள் வழக்கமாகச் செலுத்தும் கட்டணத்தை விடக் கூடுதலாக ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை செலவிடும் நிலை ஏற்படும் என்றும், அவுட்சோர்சிங் முறையில் தனியார் மையங்களில் விவரங்கள் சேமிக்கப்படுவதால் தனிநபர் தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஆவண எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், கணினி தட்டச்சர்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் எனச் சுமார் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கத்தின் சார்பில் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி நேற்று காலை முதல் பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் தங்களது அலுவலகங்களை முழுமையாக மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஆவண எழுத்தாளர்களின் சேவைகள் முடங்கியபோதிலும், தூத்துக்குடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கின.