திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டுச் சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனத் திருச்செந்தூர் நகராட்சி ஆணையர் ஈழவேந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கி வரும் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவார்கள்.

அவர்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கும் சிரமமில்லாத நடைபாதை வசதிக்கும் ஏதுவாக நகராட்சிக்குட்பட்ட சந்நிதி தெரு, நான்கு ரத வீதிகள், கோவிலைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி சார்பில் முழுமையாக அகற்றப்பட உள்ளன.

எனவே, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கடைகளின் முன்புறம் மற்றும் சாலையோரங்களில் வைத்துள்ள தற்காலிகக் கடைகள், விளம்பரப் பலகைகள், விற்பனைப் பொருட்கள் மற்றும் இதர ஆக்கிரமிப்புகளைத் தாங்களாகவே உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும்.

கந்தசஷ்டி திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதற்குக் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.