தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள கரிசல்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி அருள் விண்ணரசி. இத்தம்பதியருக்கு 8 மாதத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை அருள் விண்ணரசி தனது 8 மாதக் குழந்தையை வீட்டின் தரையில் தூங்க வைத்துள்ளார்.

அப்பகுதியில் டேபிள் ஃபேன் இயங்கிக் கொண்டிருந்த நிலையில், அதன் சுவிட்ச் பாக்ஸும் குழந்தை படுத்திருந்த இடத்தின் அருகிலேயே இருந்துள்ளது. தூக்கத்தில் குழந்தை எதிர்பாராத விதமாக உருண்டு படுத்தபோது, சுவிட்ச் பாக்ஸின் மீது கை பட்டதால் குழந்தை மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்துக் குழந்தை எந்தவித அசைவும் இல்லாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் அருள் விண்ணரசி, அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் குழந்தையை உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கொப்பம்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 8 மாத பிஞ்சு குழந்தை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.