கிர்கிஸ் குடியரசின் தலைநகர் பிஷ்கெக்கில், கடந்த அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை 4-வது ஆசிய மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வானரமுட்டி ஆச்சார்யா பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி துர்க்காஸ்ரீ, பிளிட்ஸ், ரேபிட் மற்றும் கிளாசிக்கல் ஆகிய மூன்று பிரிவுகளிலுமே 3 வெள்ளிப் பதக்கங்களை வென்று அபார சாதனை படைத்தார்.

போட்டிகள் நிறைவடைந்து இன்று ரயில் மூலம் கோவில்பட்டி வந்தடைந்த வீராங்கனை துர்க்காஸ்ரீ மற்றும் அவரது பெற்றோருக்குக் கோவில்பட்டி மக்கள் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்துக் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, முன்னாள் இராணுவ வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, ரோட்டரி சங்க நிர்வாகி ராஜமாணிக்கம், டெம்பிள் சிட்டி லயன்ஸ் சங்கச் செயலாளர் பிரபு, பசுமை இயக்கம் நிறுவனர் இராஜேந்திரன், திமுக நிர்வாகிகள், தவெக மாவட்டத் துணைச் செயலாளர் சத்யா சுரேஷ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வினோத், மேற்கு ஒன்றியச் செயலாளர் கண்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்னுச்சாமி, மேற்கு ஒன்றியத் துணைச் செயலாளர் துரைப்பாண்டி, கழக நிர்வாகிகள் இருளப்பராஜ், வெங்கடேஷ், சுப்பையா உட்படப் திரளான பொதுமக்களும் விளையாட்டு ஆர்வலர்களும் கலந்துகொண்டு வீராங்கனையைப் பாராட்டினர்.