தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் 477 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் 14 லட்சம் ரூபாய் பணத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாகப் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

புகையிலைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த புதுக்கோட்டை குளையன்கரிசல் பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் மகன் மாரி ராமர் (45), அம்மன் கோவில் தெரு, பன்னீர்செல்வம் மகன் ராஜ்குமார் (35), குளையன்கரிசல் கல்யாணசுந்தரம் மகன் ராமசுப்பு (26) ஆகிய 3பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து அரசால் தடைசெய்யப்பட்ட பல வகையான 477.69 கிலோ புகையிலைப் பொருட்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர், புகையிலை விற்பனை மூலம் கிடைத்த ரூ.14,00,000 ரொக்கப் பணம் மற்றும் 3 ஆண்ட்ராய்டு செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 நபர்கள் மீதும் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் சட்டத்தின் (COTPA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.