தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனாதசுவாமி கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி சன்னதியில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காலை 10 மணிக்குச் சுப்பிரமணிய சுவாமிக்குக் கும்ப பூஜையும், சிறப்பு யாகசாலை பூஜையும் நடைபெற்றன.
தொடர்ந்து சுப்பிரமணியர் சமேத வள்ளி-தெய்வானைக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, தயிர், பால், சந்தனம் உள்ளிட்ட 11 வகையான மங்கள பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலை 6:30 மணிக்கு முருகப்பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் சிகர நிகழ்வாக வரும் நவம்பர் 15 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்குச் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும், 16-ஆம் தேதி இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவமும் நடைபெறவுள்ளன.
சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில்:
செண்பகவல்லி அம்மன் கோவிலுடன் இணைந்த சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா மற்றும் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டுக் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், கும்ப பூஜை, சண்முக ஜபம், மகா கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
மூலவர் கதிர்வேல் முருகனுக்கு லட்சார்ச்சனை மற்றும் வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயருக்கு 21 வகை மூலிகைகளுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் பிரகாரத்தில் அமர்ந்து கந்த சஷ்டி கவசப் பாடல்களைப் பாடி வழிப்பட்டனர்.
இக்கோவிலில் வரும் 16-ஆம் தேதி இரவு 7 மணிக்குத் திருக்கல்யாண வைபவமும், 17-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் மற்றும் புஷ்பாஞ்சலியும் நடைபெறவுள்ளன.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில்:
தமிழகத்தின் 'தென்பழனி' என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டுத் திருவனந்தல், விளாபூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. காலை 10 மணியளவில் சுவாமிக்குக் காப்பு கட்டுதல், மகுடாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
கழுகுமலை திருத்தலத்தில் மட்டுமே சிறப்பு அம்சமாக நடைபெறும் தாரகாசூரன் வதம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகை தருவார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

