தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் பகுதியில் இன்ஸ்டாகிராமில் வந்த கவர்ச்சிகரமான கடன் விளம்பரத்தை நம்பி, கடன் பிராசசிங் கட்டணம் என்ற பெயரில் ரூ.9.50 லட்சத்தை இழந்து ஏமாந்த பெண் தூத்துக்குடி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
காயல்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குத் தனியார் நிதி நிறுவனம் ஒன்று குறைந்த வட்டியில் கடன் வழங்குவதாகக் விளம்பரம் வந்துள்ளது. இக்கடன் விளம்பரத்தை உண்மை என நம்பிய அப்பெண், அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
எதிர்முனையில் பேசிய மர்ம நபர், கடன் தொகையை உடனடியாகக் கணக்கில் வரவு வைக்க வேண்டுமானால் கடன் விண்ணப்பக் கட்டணம், காப்பீட்டுத் தொகை மற்றும் சேவை வரிக் கட்டணங்களை முன்கூட்டியே செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நபர் கூறியதை அப்படியே நம்பிய அந்தப் பெண், அவர் அளித்த பல்வேறு வங்கி கணக்குகளுக்குப் பல தவணைகளாகச் சேர்த்து மொத்தம் ரூ.9½ லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார். ஆனால், பணம் முழுமையாக அனுப்பப்பட்ட பிறகும் குறிப்பிட்ட தேதியில் வாக்குறுதி அளித்தபடி எந்தவிதக் கடன் தொகையும் அப்பெண்ணின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படவில்லை.
பல நாட்கள் ஆகியும் கடன் தொகையும் வரவில்லை, தொடர்பு கொண்ட போன் எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் செல்போன் எண்களை வைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

