வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, பொதுத்துறை வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்பட்டு, வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் பெயரில் போலியான அறிவிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
இது தொடர்பாகப் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB) மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில்: "ஸ்டேட் வங்கி உள்ளிட்ட அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் செய்தி முற்றிலும் போலியானது. நிதி அமைச்சகம் இதுபோன்று எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போதைய நடைமுறைப்படியே மாதத்தின் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

