தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 6 நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அபிஷேக, தீபாராதனைகளும், இரவில் சுப்பிரமணிய சுவாமி பித்தளை சப்பரத்தில் வீதியுலா வருதலும், ஆறுமுக அர்ச்சனையும் நடைபெற்றன.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று காலை கும்ப ஜெபமும், அதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு 154 பால்குடங்கள் எடுத்து ரத வீதி வழியாக ஊர்வலமாக வந்து பாலாபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் 51 வகையான சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலை 4 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து சூரன் வீதியுலாவும் நடைபெற்றன. பின்னர் சிவன் கோவிலிலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி வேல் மூலம் முதலில் கஜமுகத்துடனும் (தாரகாசுரன்), பின்னர் சிங்கமுகத்துடனும் வந்த சூரனை வதம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து சூரன் தலையுடனும், மாமரத்தில் மறைந்தபடி சேவல் தலையுடனும் வந்த சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. சூரனை சுப்பிரமணியர் வதம் செய்தபோது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "வேல் வேல் முருகா, வெற்றி வேல் முருகா, அரோகரா" என விண்ணதிர பக்தி முழக்கமிட்டனர்.
தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்குச் சிறப்புத் தீபாராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து 6 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் பானகம் அருந்தி தங்களது விரதத்தை நிறைவு செய்து, பச்சரிசி சாதம் உணவருந்தினர். பக்தர்களின் வசதிக்காகத் தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி சார்பில் வன்னியராஜ் தலைமையில் காளிராஜா, செந்தில்குமார், சுதா ஆகியோர் பக்தர்களுக்குப் பானகம் வழங்கினர்.
தூத்துக்குடி சுப்பிரமணிய சுவாமி மகமை பரிபாலன சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில், சங்கச் செயலாளர் எம்.எஸ்.எஸ். கந்தப்பன் பிள்ளை, தொழிலதிபர் டி.ஏ. தெய்வநாயகம், அறங்காவலர் குழுத் தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் ஜெயலட்சுமி, பி.எஸ்.கே. ஆறுமுகம், வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாரியப்பன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

