தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த 29 வயது பெண்ணின் குடும்பத்தினருடன், ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியான பாலமுருகன் (41) நெருங்கிய பழக்கத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பாலமுருகன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக அப்பெண்ணிற்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் அதிருப்தியடைந்த அப்பெண், பாலமுருகனின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கி ப்ளாக் வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் அப்பெண் தனியாக இருந்த நேரத்தில் உள்ளே புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் அங்கிருந்து தப்பிச் சென்று, தனது குடும்பத்தினர் உதவியுடன் தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாலமுருகனைக் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.