பள்ளிகளுக்குச் சென்ற ஆய்வாளர் வேல்ராஜ், மாணவ-மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கித் தனது குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து மாணவர்களுடன் நேரடியாக அமர்ந்து அவர்களின் எண்ணங்கள் மற்றும் எதிர்காலக் கனவுகளை அன்புடன் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், உயர்கல்வியின் முக்கியத்துவம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகளில் கல்வி ஆற்றும் பங்கு குறித்து எடுத்துரைத்தார். ஒவ்வொரு மாணவரும் சிறந்த ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, கல்வியில் முழு கவனம் செலுத்தி வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், இளைய தலைமுறையினரைப் போதைப் பழக்கங்களிலிருந்து பாதுகாப்பது அனைவரின் சமூகப் பொறுப்பு என்பதை வலியுறுத்திய அவர், போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் எனவும், இதற்குப் பொதுமக்களும் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

காவல் ஆய்வாளர் மாணவர்களுடன் எவ்விதத் தயக்கமுமின்றி ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடியது அங்கிருந்த ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. குழந்தைகள் தினத்தன்று பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களை ஊக்கப்படுத்திய ஆய்வாளர் வேல்ராஜுக்குப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.