முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கடற்கரையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழாவில், தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டுச் சிறப்பு அபிஷேகங்களும், இரவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரிப்பிரகார உலாவும் நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம் மற்றும் சாயரட்சை தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்காகக் கடற்கரைக்கு எழுந்தருளினார். அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருக்க, விண்ணதிரும் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' கோஷங்களுக்கு இடையே சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி-அம்பாளுக்குச் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் கிரிப்பிரகாரத்தில் உலா வந்து கோவிலைச் சென்றடைந்ததும், அங்கு சாயாபிஷேகம் நடைபெற்றது.
விழாவைக் காண உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். கோவில் வளாகத்தில் தங்கி விரதமிருந்த பக்தர்கள் பக்திப் பாடல்கள் பாடி முருகனை வழிபட்டனர். பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வை எளிதில் காணும் வகையில் ஆங்காங்கே பெரிய எல்.இ.டி. திரைகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் சுமார் 4,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் தடுப்புக் கம்பிகள், கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் கடலில் மிதவைத் தடுப்புகள் அமைக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், 3 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு, கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

நாளை திருக்கல்யாணம்:
7-ஆம் திருநாளான நாளை (திங்கள்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளைக் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் அருணாசலம் மற்றும் கோவில் பணியாளர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.

