முள்ளக்காடு பகுதிக்கு உட்பட்ட ராஜிவ் நகரில் அமைந்துள்ள பொதுக் குளம் பல ஆண்டுகளாக எவ்விதப் பராமரிப்பும் இன்றி முட்புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இக்குளத்தைச் சீரமைத்துத் தூர்வார வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அலட்சியப் போக்கில் உள்ள அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், குளத்தை மீட்டெடுக்கும் நோக்கிலும் ராஜிவ் நகரில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வை மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ஜெ. நேசமணி கலந்துகொண்டு, குளத்தைச் சீரமைப்பதன் அவசியத்தையும் மக்கள் இயக்கத்தின் நோக்கத்தையும் அப்பகுதி மக்களிடையே எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஊர்ப் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கையெழுத்துகளைப் பதிவிட்டனர். பராமரிப்பற்றுக் கிடக்கும் இக்குளத்தை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தூர்வாரிப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.