தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள நூத்தலக்கரை கிராமத்தில் பல ஏக்கர் பரப்பளவில் ஊர்ப் பொதுக் கண்மாய் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்தக் கண்மாயே கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், கால்நடைகளைப் பராமரிப்பதற்கான முக்கிய நீர்நிலையாகவும் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் தனது விவசாய நிலத்தின் பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில், ஏற்கனவே பொதுக் கண்மாயின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது கண்மாய் பகுதியில் சுமார் 600 மீட்டர் தொலைவிற்கு அடர்ந்து வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை விற்பனை செய்யும் நோக்கில் வெட்டியுள்ளதோடு, கண்மாயின் பல ஏக்கர் பரப்பளவையும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளார்.

இதை எதிர்த்து நூத்தலக்கரை கிராம மக்கள் தனசேகரனிடம் கேள்வி எழுப்பியபோது, "நான் வருவாய்த்துறை மற்றும் ஊராட்சித் துறை அதிகாரிகளுக்குப் பல லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் கொடுத்துள்ளேன்; உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது" எனக் கூறி மிரட்டல் விடுத்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

பொது நீர்நிலையை ஆக்கிரமித்துச் சீமைக் கருவேல மரங்களை வெட்டி விற்கும் தனிநபர் மீது மாவட்ட நிர்வாகமும் வருவாய்த்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குடிநீர் கண்மாயை மீட்டெடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.