தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஆசிரியர் தினத்தைக் கௌரவிக்கும் வகையிலும், மாநகரின் பசுமையை அதிகரிக்கும் நோக்கிலும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் "குருவனம்" தேசிய ஆசிரியர் தின பசுமைத் திருவிழா இன்று தொடங்கியது.

இத்திட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களைப் பங்கேற்கச் செய்யும் வகையில் செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டு முன்பதிவுப் படிவங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, முன்பதிவு செய்தவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் கடந்த 01.09.2026 அன்று மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியர் தினமான இன்று, தூத்துக்குடி முத்து நகர் கடற்கரைப் பூங்காவில் "குருவனம்" திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் மாநகராட்சி ஆணையாளர் கலந்துகொண்டு, ஓய்வுபெற்ற காமராஜர் கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசனுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். மேலும், திட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து, மரக்கன்றுகளை நட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் மருத்துவர் எஸ்.ஆர். கணேஷ், கிழக்கு மண்டல உதவி ஆணையர் வெங்கட்ராமன், சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், அரிகணேசன், புனித மரியன்னை கல்லூரி முதல்வர் அருட்சகோதரி ஷிபானா, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் புளூமன் ரெஜி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஸ்கேட்டிங் பயிற்சி மாணவர்கள், 'வீ கேன் டிரஸ்ட்' மற்றும் 'அறம் சார் அறக்கட்டளை' அமைப்பினர், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மாநகராட்சி மற்றும் மாவட்ட வனத்துறை சார்பில் மரம் நடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் இதுவரை பதிவு செய்யத் தவறியவர்கள், மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு மாநகராட்சி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.