நாடு முழுவதும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை தேசிய கண் தான இருவார விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒருவர் உயிரிழந்த 6 மணி நேரத்திற்குள் அவரது விழி வெண்படலத்தைத் தானமாக வழங்குவதன் மூலம், கருவிழி பாதிப்பால் பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒளி வழங்க முடியும். ஒருவரின் கண் தானம் மூலம் நான்கு பேருக்குப் பார்வை கிடைக்கும் என்பது குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பேரணிக்கு நகர் மன்றத் தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ், பொன்னூஸ் நேச்சுரல்ஸ் உரிமையாளர் பொன்னுச்சாமி பரஞ்சோதி ஆகியோர் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனர்.

பேரணியில் நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனைச் செவிலியர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைகளில் விழிப்புணர்வுப் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு பிரதான சாலை வழியாகச் சென்று ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியைச் சென்றடைந்தனர்.

இந்நிகழ்ச்சிக்குக் கோவில்பட்டி கண் தான இயக்கத் தலைவர் விநாயகா ரமேஷ் தலைமை வகித்தார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மீனாட்சி, கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி கண் மருத்துவமனை மருத்துவர் சுகன்யா வரவேற்றார்.

மேலும், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் திவ்யன் ஆபிரகாம், ஸ்ரேயா கபூர், ஆயுஷ் குப்தா, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துச்செல்வம், சீனிவாசன், ஜெயபிரகாஷ் நாராயணசாமி, ராஜ்குமார், ராஜமாணிக்கம், நடராஜன், மாரியப்பன், கிருஷ்ணசாமி, கண்ணன், கல்லூரிப் பேராசிரியர்கள் பாலமுருகன், லதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை மேலாளர் ராஜாராம் மோகன்ராய் நன்றி கூறினார்.