தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் புகை மற்றும் சாம்பல் துகள்கள் காரணமாகத் தூத்துக்குடி நகர் முழுவதும் கடும் காற்று மாசு ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் புகைபோக்கிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக வெளியேறும் கரும்புகை மற்றும் நுண் சாம்பல் துகள்கள் காற்றில் கலந்து, நகரின் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் பரவி வருகிறது. இதன் காரணமாகக் காலை மற்றும் மாலை நேரங்களில் நகரமே அடர்ந்த புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.

இந்தத் தொடர் காற்று மாசு காரணமாகப் பொதுமக்கள் மூச்சுத்திணறல், தொடர் இருமல், கண் எரிச்சல், தலைவலி போன்ற பல்வேறு உடல் உபாதைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவிற்குச் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

thermalmasu.jpg

எனவே, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக நேரில் சென்று கள ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அனல் மின் நிலையத்திலிருந்து அளவுக்கு அதிகமாகப் புகை வெளியேறுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், அப்பகுதியில் காற்றின் தரத்தைப் பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.