தூத்துக்குடியில் உப்பளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பகுதிகளை அழித்துக் கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடாவிட்டால், தொழிலாளர்களைத் திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் எனச் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

தூத்துக்குடி முள்ளக்காடு, கோவளம், முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய கோவளம் பசுவந்தனை தண்பாடு சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ரகுபதி, முகேஷ் சண்முகவேல், பாலசுப்ரமணியன், எல்.ஆர். சிவாகர், வழக்குரைஞர் பாஸ்கர், மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யும் இடங்கள் மற்றும் மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதிகளைத் தமிழக அரசு சிப்காட் மூலம் கையகப்படுத்தி, கொரிய நாட்டு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக வழங்கும் முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும்.

உப்பளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வரும் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தும், உப்பு உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையைத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எழுப்பிப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் 10 தினங்களுக்குள் இப்பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து, முதல்வரை நேரில் சந்தித்துப் பேச அனுமதி பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்க நிர்வாகிகள், "உப்பளங்கள் மீது கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் அல்லது வேறு மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில், உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களைத் திரட்டி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தனர்.