தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குமாரசாமிபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி சாந்தி (31). குடும்பப் பிரச்சினை காரணமாகக் கணவர் முத்துக்குமார் கடந்த ஓராண்டாக மனைவியைப் பிரிந்து சென்னையில் வசித்து வருகிறார். இதனால் சாந்தி தனது 3 குழந்தைகளுடன் குமாரசாமிபுரத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி இரவு உடன்குடி - செட்டியாபத்து சாலையில் சாந்தி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை வழிமறித்து அரிவாளால் கொடூரமாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த சாந்தி மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்துக் குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், சாந்தியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முருகேசன் மகன் யோகலிங்கம் (26) மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் சேர்ந்து சாந்தியை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த யோகலிங்கத்தைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
அவர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது: "கணவரைப் பிரிந்து வாழும் சாந்திக்கு நான் சில உதவிகளைச் செய்து வந்தேன். ஆனால், அவர் என்னை அடிக்கடி பணம் தருமாறும், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி மிரட்டத் தொடங்கினார்.
நான் அவரைத் தவிர்த்து வந்தபோதிலும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தார். அவர் உயிரோடு இருந்தால் நான் நிம்மதியாக வாழ முடியாது எனக் கருதி, எனது நண்பருடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டினேன்." இவ்வாறு யோகலிங்கம் வாக்குமூலம் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள அவரது நண்பர் சுரேஷைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

