தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஸ்ரீவைகுண்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு தொடர்பான ஆலோசனை மற்றும் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொண்ட காங்கிரஸ் மறுசீரமைப்புப் பார்வையாளர் முத்தழகன், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கொண்டுவருவதற்கான தீவிர நடவடிக்கைகளின் ஒருபகுதியாகவே தற்போது கட்சியில் மறுசீரமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன.
ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்தும் விதமாகவும், கட்சிக்கு புதிய புத்துயிர் அளிக்கும் நோக்கத்தோடும் இந்த மறுசீரமைப்பில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப் பணிகள் குறித்த விவரங்களை மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் நாள்தோறும் கேட்டறிந்து கண்காணித்து வருகிறார்.
ராகுல் காந்தியின் இலக்கின்படி, எதிர்வரும் காலத்தில் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்; காங்கிரஸ் கட்சி மீண்டும் அரியணையில் அமரும்." இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

