பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கோரி ஸ்ரீவைகுண்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையான அணுகுமுறையைக் கையாண்டு கைது செய்ததற்குத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வடகால் கடைமடை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்காகத் உடனடியாகத் தண்ணீர் திறந்து விடக் கோரி விவசாயிகள் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துத் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய நியாயமான கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் காவல்துறையினர் கடுமையான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. விவசாயிகளை அடக்குமுறையின் மூலம் கைது செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தால், அதற்கான காரணங்களை விவசாயிகளிடம் அதிகாரிகள் நேரில் சென்று விளக்க வேண்டும்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுதான் ஜனநாயக நடைமுறையே தவிர, காவல்துறையைப் பயன்படுத்திப் போராட்டத்தை ஒடுக்குவதும் கைது செய்வதும் ஏற்புடையதல்ல. எனவே, விவசாயிகளின் பாசனத் தண்ணீர் பிரச்சினைக்கு அரசு உடனடியாக உரிய தீர்வு காண வேண்டும்." இவ்வாறு சித்ராங்கதன் வலியுறுத்தியுள்ளார்.