தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு, ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சுவாமிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்துச் செண்டை மேளத்துடன் கோலாகலமாக ஊர்வலம் வந்தனர்.
விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவிலின் 39-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழா மிக விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் சுவாமிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து மகா சுதர்சன ஹோமம் உள்ளிட்ட சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, நாகலாபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம் கவுண்டன்பட்டி ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலைச் சென்றடைந்தது. அதிரும் செண்டை மேளங்கள் மற்றும் அதிரடி வானவேடிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக நடந்து வந்தனர்.
கோவிலைச் சென்றடைந்ததும் ஸ்ரீ நவநீதகிருஷ்ணனுக்குப் பாலாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனைகள் நடைபெற்றன. இச்சிறப்புப் பூஜைகளில் கவுண்டன்பட்டி, நாகலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கவுண்டன்பட்டி யாதவ சமுதாயத் தலைவர் முருகன் மற்றும் மக்கள் இணைந்து மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

