தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், மதுரையைச் சேர்ந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை கூடல் நகர், ஆனையூர் பகுதியைச் சேர்ந்தவர் பரமலிங்கம் மகன் அருணேசன் (59). இவர் ஆறுமுகநேரி பகுதியில் ஒப்பந்ததாரர் விஜயகுமார் என்பவரிடம் வோடபோன் பைப்லைன் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அருணேசன் தனது ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் அடைக்கலாபுரம் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் குளித்துவிட்டு ஆறுமுகநேரி நோக்கி வந்துகொண்டிருந்தார்.

ஆறுமுகநேரி சீனந்தோப்பு விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் சுரேஷ் (26) என்பவர் தனது டிவிஎஸ் ஜெஸ்ட் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது, சுரேஷ் தனக்கு முன்னால் சென்ற பொலிரோ வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த அருணேசனின் இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த அருணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த சுரேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு, முதலுதவிக்காகத் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஆறுமுகநேரி காவல் நிலையப் காவல்துறையினர், அருணேசனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.