திருச்செந்தூரில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் வீட்டில், 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற பணிப்பெண்ணை காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்ட 1 மணி நேரத்தில் அதிரடியாகக் கைது செய்து, நகைகளையும் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவரது மனைவி மாரியம்மாள் (61). இவரது வீட்டில் அதே பகுதி செட்டி அம்மன் கோவில் அருகே வசிக்கும் முத்துமாலை என்பவரது மனைவி இசக்கியம்மாள் (40) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மாரியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பணிப்பெண் இசக்கியம்மாள், மாரியம்மாளின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள பீரோ மற்றும் மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.65,000 ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளார்.
மருத்துவமனைச் சிகிச்சை முடிந்து கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி மாரியம்மாள் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். நேற்று (செப்டம்பர் 2) பீரோ மற்றும் மேஜை டிராயரைத் திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த தாலி முறுக்கு செயின், முத்துமாலை, பெண்டன் மாலை, ஓம் டாலர் செயின், வாட்ச் வளையல், சிமிக்கி கம்மல், மோதிரங்கள் உட்பட மொத்தம் 32 பவுன் தங்க நகைகளும், ரூ.65,000 ரொக்கமும் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து பணிப்பெண் இசக்கியம்மாளைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாரியம்மாள் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என இசக்கியம்மாள் மறுத்துள்ளார். உடனடியாக இது குறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் மாரியம்மாள் புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவில் காவல் நிலையக் காவல்துறையினர், உடனடியாகச் விசாரணையில் இறங்கினர்.
புகார் அளிக்கப்பட்ட ஒரே மணி நேரத்திற்குள் பணிப்பெண் இசக்கியம்மாளைக் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த திருடப்பட்ட 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.65,000 ரொக்கப் பணத்தையும் முழுமையாகக் கைப்பற்றினர். காவல் துறையின் அதிரடி நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

