முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழாவின் 4-ஆம் நாளான நேற்று, சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
திருச்செந்தூர் கோவிலில் இந்த ஆண்டிற்கான ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழா நாட்களின் போது தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகின்றனர்.
திருவிழாவின் 4-ஆம் நாளான நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தனர்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வெள்ளி யானை வாகனத்திலும், வள்ளி அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலாவந்து அருள் பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் 5-ஆம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு குடவருவாயில் தீபாராதனை நடைபெற உள்ளது. ஆவணித் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் இணைந்து சிறப்பாகச் செய்து வருகின்றன.

