தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஆவல்நத்தம் மேலத் தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மகன் அசோக் என்ற அய்யாத்துரை (27). இவர் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது கொலை வழக்கில் தொடர்புடையவராகக் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார். ஜாமீனில் வந்த அய்யாத்துரை கோவில்பட்டி நடராஜபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

கடந்த புதன்கிழமை அய்யாத்துரை வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, கொலையுண்ட கார்த்திக்கின் உறவினர்களான வடக்குத் திட்டங்குளத்தைச் சேர்ந்த பொன்ராஜ் (21) மற்றும் கருமலை மகன் கோதாளமுத்து (76) ஆகிய இருவரும் அவரை வழிமறித்தனர்.

திடீரெனத் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அய்யாத்துரையை வெட்டி, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த அய்யாத்துரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து அய்யாத்துரை அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தாக்குதலில் ஈடுபட்ட பொன்ராஜ் மற்றும் கோதாளமுத்து ஆகிய இருவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். பழிக்குப்பழியாக நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.