தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில், தொடர்புடைய 9 மாணவர்களைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து திருநெல்வேலி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், பள்ளி நூலக அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சக மாணவர்கள் 9 பேர் அவரைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அவரது பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடியைத் தூவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த குளத்தூர் காவல் நிலையப் காவல்துறையினர் பள்ளிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மாணவனுக்குத் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது உண்மை எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட 9 மாணவர்கள் மீதும் போக்ஸோ சட்டம் மற்றும் பிற 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 9 மாணவர்களும் தூத்துக்குடி இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் திருநெல்வேலியில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமையில் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரடியாகச் சென்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களிடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடுத்தகட்ட அறிக்கை தமிழகப் பள்ளிக் கல்வித்துறைக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தகட்டக் துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.