ஸ்ரீவைகுண்டம் தாலுகா திருப்பணிசெட்டிக்குளம் பஞ்.,சில் உள்ள புனைசெட்டிக்குளத்தின் மூலம் சுமார் 100 ஏக்கர் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது குளம் மற்றும் கால்வாய்கள் தண்ணீரின்றி உள்ளதால் குளம் மற்றும் பாசன பாசன கால்வாய்களை தூர்வாரி தருமாறும், குளக்கரையை பலப்படுத்தி பறவைகள் சரணாலயம் அமையும் விதத்தில் குளக்கரையில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டி தருமாறும் இப்பகுதி விவசாயிகள் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் மற்றும் தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சுற்றுலா தொகுப்பு சார்பில் புனைசெட்டிக்குளம் தூர்வாரும் பணி நேற்று துவங்கியது. புதுவாழ்வு சங்க விவசாய பிரிவு ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் வரவேற்றார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்து குளம் தூர்வாரும் பணியையும், குளக்கரையில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியையும் துவக்கி வைத்தார். தொடர்ந்து பெருங்குளம்-மேலமங்களகுறிச்சி கால்வாய் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்.

இதில் மகளிர் திட்ட இணை இயக்குனர் நாகராஜன், உதவி திட்ட அலுவலர் அனிதா மாவட்ட வள வல்லுநர் வெயிலுமுத்து, ஏரல் தாசில்தார் செல்வக்குமார், ஸ்ரீவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி, சாயர்புரம் போப் கல்வியியல் கல்லூரி தாளாளர் ஆலயமணி, போப் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எட்வர்ட் ஜான்சன் பால், சாயர்புரம் வியாபாரிகள் சங்க தலைவர் நாகராஜன், வட்டார இயக்க மேலாளர் பத்திரகாளி (எ) பத்மா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை பொதுமேலாளர் செல்வக்குமார் தலைமையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.