இந்தியாவின் பசுமை கடல்சார் மாற்றத்தை விரைவுபடுத்தும் வகையில், பன்னாட்டுத் தூய்மைப் போக்குவரத்து கவுன்சில் (ICCT) தயாரித்துள்ள "கடல்சார் கார்பன் குறைப்பில் வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தின் பங்கு" என்ற கொள்கை அறிக்கை, புதுடெல்லியில் நடைபெற்ற 'இந்தியத் தூய்மைப் போக்குவரத்து உச்சிமாநாடு 2026'-இல் வெளியிடப்பட்டது.

தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் மையமாகத் திகழும் இத்துறைமுகத்தில், 3 MW பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. 2 × 750 கன மீட்டர் பசுமை மெத்தனால் சேமிப்புக் கிடங்கு, பசுமை அமோனியாவிற்கான பிரத்யேகப் படகுத் துறை மற்றும் கப்பல்களுக்குக் கரையில் இருந்தே மின்சாரம் வழங்கும் (Shore-to-Ship power) வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பசுமை எரிபொருள் உற்பத்தியாளர்களுக்காக 501 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, ரூ.41,860 கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் 'ஹரித் சாகர்' வழிகாட்டுதலின் படியும், பிரதமரின் 2070-க்குள் 'பூஜ்ய உமிழ்வு' (Net Zero) இலக்கின் படியும் இத்துறைமுகம் தொடர்ந்து பசுமைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது எனத் துறைமுகச் சேர்மன் சுசாந்த குமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.