தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (03.09.2026), மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்களின் 2-வது மற்றும் 3-வது காலாண்டு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அளவிலான வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில்: இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் தற்போதைய நிலை, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகைகள் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள்,
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய நிலுவைகள் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கும் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற ஆதிதிராவிடர் நலக் குழுக் கூட்டத்தில்: ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் கல்வித் தரம், பயிற்று நிலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,
மாணவர் விடுதிகளில் நூலகம், விளையாட்டு வசதிகள் மற்றும் பொதுத்தேர்வு ஆயத்தப் பயிற்சிகளை அமைத்தல்,
மாவட்ட அளவில் கலை, பேச்சு, கட்டுரை மற்றும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்,
இலவசத் தையல் இயந்திரங்கள், மிதிவண்டிகள் மற்றும் சுகாதாரமற்ற தொழில்புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை விநியோகம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
சுகாதாரக் குறைவான தொழில்புரிவோர் மறுவாழ்வுச் சட்டம் - 2013:
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் தொழிலுக்கான தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தூய்மைப் பணியாளர்களின் சமூக-பொருளாதார முன்னேற்றம், குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர், தெருவிளக்கு, போக்குவரத்து வசதிகள், விபத்துக் காப்பீடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்களுக்கான PF, EPF, ESI போன்ற பிடித்தங்கள் குறித்த விவரங்களை ஊழியர்களுக்குத் வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பற்றாளர் கூட்டமும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு. பென்னட் ஆசீர், நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

