தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மற்றும் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து தொழில் முனைவோருக்கான சுயதொழில் கடன் திட்டங்கள் மற்றும் 'உத்யம்' சான்றிதழ் பதிவு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கை கோவில்பட்டி சௌபாக்யா மஹாலில் நடத்தின.
இக்கருத்தரங்கிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ராதாகிருஷ்ணன், ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துச்செல்வம், நாராயணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கச் செயலாளர் ரமேஷ் குமார் வரவேற்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய மேலாளர் ஸ்வர்ணலதா பங்கேற்று, அரசு வழங்கும் பல்வேறு சுயதொழில் கடன் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விரிவாக விளக்கினார். தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் காந்திநாதன், கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் தொழில் கடன்கள் மற்றும் அதன் பயன்கள் குறித்துப் பேசினார்.
மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் நாகஜோதி 'உத்யம்' (Udyam) சான்றிதழ் பதிவின் முக்கியத்துவம் குறித்தும், கார்த்திகேயன் 'செட்' சான்றிதழ் பதிவு முறைகள் குறித்தும் விளக்க உரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துணைப் பொது மேலாளர் சீனிவாசன், மாவட்ட சமூகத் தணிக்கை வள அலுவலர் சேகர், ஜி.வி.என். கல்லூரிப் பேராசிரியர்கள் வெங்கடேஸ்வரா, ராதாகிருஷ்ணன், விஜயலட்சுமி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் நடராஜன், மணிகண்டன், கபிலரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், ஜி.வி.என். கல்லூரிஃபேஷன் டெக்னாலஜி, வணிகவியல், கணினி அறிவியல் துறை மாணவர்கள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள், இளம் தொழில் முனைவோர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுப் பயன்பெற்றனர். நிறைவாக, மாவட்ட தொழில் மையப் புள்ளிவிவர ஆய்வாளர் ஞானபிரகாசி நன்றி கூறினார்.

