தூத்துக்குடி நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் தொடங்கி 10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டுத் தினசரி ஸ்ரீமத் பாகவதம் பாராயணம், மதுரகீதம் இசைத்தல், வெவ்வேறு வாகனங்களில் ராதையும் கிருஷ்ணரும் வீதி உலா வரும் நிகழ்ச்சி மற்றும் ஊஞ்சல் வைபவம் ஆகியவை நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக, ராதை வீட்டார் சார்பில் பாரம்பரியச் சீர்வரிசைப் பொருட்கள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ராதாகிருஷ்ணா பஜனைப் பாடல்களைப் பாடினர்.
அதனைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராதையின் கழுத்தில் கிருஷ்ண பெருமான் திருமாங்கல்யம் நாணும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 'மாங்கல்யம் தந்துனானே' மங்கல வாத்தியங்கள் முழங்க, கூடியிருந்த திரளான பக்தர்கள் கரவொலி எழுப்பியும், "ஹரே ராமா ஹரே கிருஷ்ணா" என நாம கோஷங்களை முழங்கியும் ராதாகிருஷ்ணனைத் தரிசனம் செய்தனர்.
இத்திருக்கல்யாண வைபவத்தைச் ஸ்ரீ ராமசாமி பாகவதார் சிறப்புற நடத்தி வைத்தார். தொடர்ந்து சுவாமிக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் காட்டப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா நிறைவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் தூய திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

