முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுவதையொட்டி, கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்குக் கிரீடம் சூட்டி, பொன்னாடை போர்த்தித் தங்களின் அன்பையும் கௌரவத்தையும் தெரிவித்தனர். மேலும், ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

இவ்விழாவிற்கு கோவிபட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்கச் செயலாளர் ரமேஷ் குமார், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை இயற்கை மருத்துவர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் செந்தில்குமரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டச் சாலை பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் முத்துச்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான பணியைப் பாராட்டிப் பேசி, அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழறிஞர் சங்கரவள்ளிநாயகம் அறக்கட்டளைத் தலைவர் திருமலை முத்துசாமி, பள்ளி ஆசிரியர்கள் பாலாஜி, சத்தியபாமா, கவிதா, செண்பகவல்லி, பொன்மலர் பாரதி, பிருந்தாதேவி, பொற்செல்வி, நர்மதா, முத்துலட்சுமி, லூர்து மற்றும் திரளான மாணவர்களும் கலந்துகொண்டனர். நிறைவாக, ஆசிரியை மீனா நன்றி கூறினார்.