தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் மேலமருதூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பிள்ளை. இவரது மகன் பாலசுந்தர கணபதி (50), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பண்டாரம் (65) என்பவரது குடும்பத்திற்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது குறித்துத் தருவைகுளம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பண்டாரம், அவரது மகன் ராஜேஷ் (26), முனியசாமி மகன் வசந்த் (28), காசிராமலிங்கம் மகன் முத்துராஜ் (27) ஆகிய 4 பேரும் சேர்ந்து, பாலசுந்தர கணபதி மற்றும் அவரது மகன் செல்வத்குமார் ஆகிய இருவரையும் கொலை செய்யத் திட்டம் தீட்டினர்.
கடந்த 19.06.2018 அன்று பகல் 11 மணி அளவில் மேலமருதூர் ஒத்தக்கண்ணு பாலம் அருகே 4 பேரும் மறைந்திருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த செல்வக்குமாரை வழிமறித்துக் கம்பால் தாக்கினர். அவரிடமிருந்து தப்பி ஓடிய செல்வக்குமார், தனது சித்தப்பா வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் கதவை உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றனர்.
அதே நேரத்தில், துரைச்சாமிபுரம் பகுதியில் பாலசுந்தர கணபதி ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதை அறிந்த அந்த 4 பேரும் அங்கு சென்று, அவரைப் பலத்த கம்பால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாகக் கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்துக் குளத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பண்டாரம், ராஜேஷ், வசந்த், முத்துராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட பண்டாரம், ராஜேஷ், வசந்த், முத்துராஜ் ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் பண்டாரம், வசந்த், முத்துராஜ் ஆகிய 3 பேருக்கு தலா 7,500 அபராதமும், ராஜேஷிற்கு 12,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கோபி ஆஜரானார்.

