கடலூர் மாவட்டம் கோத்தப்பாக்கம் நாத நாயகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (41). இவர் தனது தந்தை மும்மூர்த்தி, தாய் ருக்குமணி மற்றும் மகள் அமிர்தீஸ்வரி ஆகியோருடன் ஆம்னி வேனில் நேற்று வெள்ளிக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். வேனை ஏழுமலை ஓட்டிச் சென்றுள்ளார்.
மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி புறவழிச்சாலையில் உள்ள இனாம்மணியாச்சி மேம்பாலம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தூக்கி வீசப்பட்டு தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த சிறுமி அமிர்தீஸ்வரி அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி தப்பினார். இருப்பினும், வேனை ஓட்டி வந்த ஏழுமலை, அவரது தந்தை மும்மூர்த்தி மற்றும் தாய் ருக்குமணி ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் காவல்துறையினர், காயமடைந்த 3 பேரையும் மீட்டுச் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

