தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சாலையோர சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 'பிஎம் ஸ்வாநிதி' (PM SVANidhi) திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் சிறப்பு முகாம்கள் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.

தூத்துக்குடி மாநகராட்சி மாண்புமிகு மேயர் மற்றும் ஆணையர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு எளிமையான முறையில் வங்கிக் கடன் வழங்கும் வகையில் இந்த சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இம்முகாம்கள் தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செப்டம்பர் 09, 10, 11, 17, 18, 21 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளன. சாலையோர வியாபாரிகளின் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வகையில் 3 தவணைகளாகக் கடனுதவி வழங்கப்படுகிறது.

• முதல் தவணை: ₹15,000

• இரண்டாம் தவணை: ₹25,000

• மூன்றாம் தவணை: ₹50,000

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

காய்கறி, பழங்கள், மீன், மலர்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஜவுளி, புத்தகங்கள், கைவினைப் பொருட்கள், தையல், டீ, காபி, தின்பண்டங்கள், உணவகங்கள், காலணிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து வகையான சாலையோர வியாபாரம் செய்பவர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

இக்கடனுதவிக்கு விண்ணப்பிக்க வரும் வியாபாரிகள் பின்வரும் ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வர வேண்டும்:

• ஆதார் கார்டு நகல்

• ஸ்மார்ட் கார்டு (குடும்ப அட்டை) நகல்

• பான் கார்டு நகல்

• வங்கி பாஸ்புத்தகம் நகல்

• பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

• வியாபாரம் செய்யும் நேரடி புகைப்படம்

• ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண் (Mobile Number)

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள அனைத்துச் சாலையோர வியாபாரிகளும் இச்சிறப்பு முகாமில் தவறாமல் கலந்துகொண்டு கடனுதவி பெற்றுப் பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் சி. ப்ரியங்கா கேட்டுக்கொண்டுள்ளார்.