இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் முன்னோடியாகத் திகழ்ந்த வ.உ.சிதம்பரனாரின் வீரம், தியாகம், தன்னிறைவு மற்றும் சுதந்திர உணர்வை வலியுறுத்திய தொலைநோக்குப் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் விழா நடைபெற்றது.

துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித், தலைமை கண்காணிப்பு அதிகாரி பி. கவின் மகாராஜ், துறைமுக மூத்த அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விழாவில் துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித் பேசுகையில்: "சுதேசி இயக்கத்தின் கப்பல் போக்குவரத்து கழகத்தை நிறுவுவதற்காக வ.உ.சிதம்பரனார் மேற்கொண்ட முன்னோடியான முயற்சிகள் என்றும் நினைவுகூரத்தக்கவை. கடந்த நிதியாண்டுகளில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடல்சார் உட்கட்டமைப்பு மற்றும் திறன்களை மேலும் வலுப்படுத்தும் வகையில் வெளித்துறைமுகத் திட்ட மேம்பாடு, கப்பல் கட்டும் தளம் மற்றும் பழுதுபார்க்கும் மையம் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன. பசுமை அமோனியா, பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் மூலம் சுற்றுச்சூழல் சார்ந்த வளர்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய முயற்சிகள் 'சுயசார்பு இந்தியா' (Atmanirbhar Bharat) தொலைநோக்குப் பார்வைக்கு முக்கியப் பங்களிப்பை வழங்குகின்றன" என்று தெரிவித்தார்.

திருச்சி காவேரி கல்லூரி உதவிப் பேராசிரியர் நா. சாத்தம்பை பிரியா, வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை, துணிச்சல் மற்றும் தேசப்பற்று குறித்துச் சிறப்புரையாற்றினார். தலைமை கண்காணிப்பு அதிகாரி பி. கவின் மகாராஜ் வாழ்த்துரையாற்றினார்.

தொடர்ந்து, பாரதப் பிரதமரின் 'காசநோய் இல்லாத பாரதம்' இயக்கத்தின் கீழ், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு செய்திமடலைத் துறைமுகத் தலைவர் சுஷாந்த் குமார் புரோஹித் வெளியிட்டார்.

முன்னதாக, துறைமுக ஆணையச் செயலாளர் எஸ்.பி. மோகன் குமார் அனைவரையும் வரவேற்றார். வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. துறைமுக மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிறைவாக, துறைமுக ஆணையத் தலைமை மருத்துவ அலுவலர் பி. நரேஷ் குமார் நன்றி கூறினார்.