இயற்கையைச் சுத்தமாகப் பராமரிப்பதிலும், நோய்கள் பரவுவதைத் தடுப்பதிலும் கழுகுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எனினும், உணவு மாற்றம் மற்றும் நச்சுத்தன்மை காரணமாகப் பல கழுகு இனங்கள் அழியும் அபாயத்தைச் சந்தித்து வருகின்றன. எனவே, அழிந்து வரும் கழுகு இனங்களின் முக்கியத்துவம் குறித்துப் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை சர்வதேச கழுகுகள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் முத்தானந்தபுரம் தெருவில் அமைந்துள்ள கொண்டையராஜு ஓவியப் பயிற்சிப் பள்ளியில் விழிப்புணர்வுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் திரளான மாணவர்கள் கலந்துகொண்டு கழுகுகளின் படங்களுக்கு வண்ணங்கள் தீட்டித் தங்களது விழிப்புணர்வை வெளிப்படுத்தினர். போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் திருக்குறள் புத்தகங்கள் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டுப் பாராட்டப்பட்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்டச் சாலை பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் முத்துச்செல்வம் தலைமை வகித்தார். கொண்டையராஜு ஓவியப் பயிற்சிப் பள்ளி நிர்வாகி முருகபூபதி முன்னிலை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முத்து முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும் திருக்குறள் புத்தகங்களையும் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் ஓவியப் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.