தமிழ்நாடு அரசு இந்தியாவின் முதல் கப்பல் கட்டும் தளத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டதிலிருந்து, இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல், தொழில்நுட்ப ஆய்வுகள், உள்கட்டமைப்பு வசதிகள், சுற்றுச்சூழல் அனுமதிகள், மத்திய அரசுடன் ஒருங்கிணைப்பு, உள்ளூர் சப்ளையர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் திறமையான மனிதவள மேம்பாடு போன்ற பணிகளை மாநில அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

2026 செப்டம்பர் முதல் வாரத்தில் தொழில்நுட்ப ரீதியாக இத்திட்டத்தில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வ.உ.சி. துறைமுக ஆணையம், விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பதற்கான பணி ஆணையை, ஹூன்டாய் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வழங்கியுள்ளது, மேலும் முன்மொழியப்பட்ட கப்பல் கட்டும் தளத்தில் தொடக்கப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கு இணையாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக உலகளாவிய ஆலோசகர்களை அழைக்கும் கோரிக்கை முன்மொழிவு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கப்பல் கட்டும் தளம் மற்றும் பரந்த கடல்சார் உற்பத்தி சூழல் அமைப்பின் திட்டமிடலில் சர்வதேச நிபுணத்துவம் கொண்டு வரப்படுகிறது.

ஹூண்டாய் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையிலான தொடர்பு மிக உயர்ந்த நிலையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழில்துறை அமைச்சர் ஜூன் 2026 இல் ஹூண்டாயின் உல்சான் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார், மேலும், ஹூண்டாயின் மூத்த பிரதிநிதிகள் குழு 17 ஜூன் 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்தது.

ஹுன்டாய் நிறுவனத்துடன் தொடர்ச்சியான வாராந்திர ஒருங்கிணைப்பு பொறிமுறை நடைமுறையில் உள்ளது. இதில் Guidance Tamil Nadu, SIPCOT, வ.உ.சி. துறைமுக ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் இணைந்து நிலம், தொழில்நுட்ப ஆய்வுகள், உள்கட்டமைப்பு, அனுமதிகள், உள்ளூர்மயமாக்கல் மற்றும் பிற உடனடி திட்டத் தேவைகளை கண்காணித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சன்ஜூன் ஹாங் தலைமையிலான மூத்த குழு 1 முதல் 10 செப்டம்பர் 2026 வரை 10 நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்தது. இக்குழு தூத்துக்குடியில் விரிவான தள ஆய்வை மேற்கொண்டதுடன், தொழில்துறை அமைச்சர், கூடுதல் தலைமைச் செயலாளர், கப்பல் போக்குவரத்து இயக்குனரகத்தின் மூத்த அதிகாரிகள், வ.உ.சி. துறைமுக ஆணையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் கலந்துரையாடியது. இதில் ஊக்கத்தொகை கட்டமைப்பு, DPR-ன் நிலை மற்றும் ஒட்டுமொத்த திட்ட காலவரிசை குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல் கட்டமாக சுமார் 1700 ஏக்கர் நிலத்தை மாற்றுவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு சிப்காட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. சிப்காட் நிறுவனம் வ.உ.சி. துறைமுக ஆணையத்துடன் இணைந்து பொதுவான உள்கட்டமைப்பை உருவாக்கும்.

நேற்று (09.09.2026) தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்தித்த போது, தூத்துக்குடி திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வதாக ஹீன்டாய் குழு உறுதியளித்தது. மேலும், திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மாநில அரசின் முழு ஆதரவையும் அமைச்சர் உறுதி செய்தார்.

தமிழ்நாடு பயணத்திற்குப் பிறகு, ஹூன்டாய் குழு இன்று (10.09.2026) துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை சந்தித்து, இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இந்திய அரசிடம் இருந்து தேவையான கொள்கை அளவிலான ஆதரவு குறித்து விவாதித்தது.

கப்பல் கட்டும் தளத்தை தாண்டி, அதனை சுற்றியுள்ள பரந்த தொழில்துறை சூழல் அமைப்பையும் தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இந்தியாவின் முக்கிய எஃகு உற்பத்தியாளர்களுக்கும் இடையே தொழில்நுட்ப தேவைகள் மற்றும் தர சரிபார்ப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை எளிதாக்கி வருகிறது.

இதற்கு இணையாக, தமிழ்நாடு மாநில திறன் மேம்பாட்டு இயக்கத்துடன் இணைந்து, பிரத்யேக திறமை குழாய் உருவாக்கப்பட்டு வருகிறது. இது தொழிலாளர் மற்றும் நிர்வாக பணிகளை உள்ளடக்கியது, மேலும் கொரியாவில் பயிற்சி அளித்து பின்னர் தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்தில் பணியமர்த்தும் சாத்தியக்கூறுகளும் ஆராயப்படுகின்றன.

தூத்துக்குடியை உலகளாவிய கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் உற்பத்தி மையமாக நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு ஹூண்டாய், இந்திய அரசு மற்றும் அனைத்து பங்குதாரர்களுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த கப்பல் கட்டும் தளம் தென் தமிழ்நாட்டில் ஒரு பரந்த தொழில்துறை சூழல் அமைப்பை உருவாக்கும். இது முதலீடு, தொழில்நுட்ப பரிமாற்றம், திறமையான வேலைவாய்ப்பு, சப்ளையர் மேம்பாடு, உள்ளூர்மயமாக்கல் மற்றும் உலகளாவிய கப்பல் கட்டுமான மதிப்பு சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பை இப்பகுதிக்கு கொண்டு வரும் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.