தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே உள்ள ரகுராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். கார் டிரைவரான இவருக்கு, காரில் திருச்சி சென்று வந்தபோது திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த சுமேஷ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். தான் வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், ரஷ்யாவுக்கு டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் சுமேஷ் கூறியுள்ளார்.
இதனை நம்பிய மாரியப்பன், தனது உறவினர் மாதவராஜ் மற்றும் நண்பர் ரங்கராஜ் ஆகியோருடன் இணைந்து தலா ரூ.2.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.7.5 லட்சத்தைச் சுமேஷிடம் கடந்த பிப்ரவரி மாதம் கொடுத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் மாரியப்பனுக்கு மட்டும் விசா கிடைத்துவிட்டதாகக் கூறி சென்னை வரவழைத்து, அங்கிருந்து மும்பைக்கு அனுப்பி வைத்துள்ளார். அதேபோல் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவரையும் உடன் அனுப்பி வைத்துள்ளார். ஏப்ரல் 15-ஆம் தேதி மும்பையிலிருந்து விமானம் புறப்படும் எனக் கூறிப் போலி பயணச்சீட்டையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். பின்னர் போர் காரணமாகப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறி அவர்களை மும்பையிலேயே தங்க வைத்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு மேலாகியும் வேலை கிடைக்காமல், செலவுக்குப் பணமும் இல்லாமல் மாரியப்பனும் இளவரசனும் மும்பையில் உள்ள ஒரு டீக்கடையில் ரூ.100 தினக்கூலிக்கு வேலை பார்த்து வந்தனர்.
ஜூன் மாதத்தில் சுமேஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதை அடுத்து, திருச்சி கே.கே.நகர் அலுவலகத்திற்குச் சென்று பார்த்தபோது அங்கே நிறுவனம் இயங்கியதற்கான தடயமே இல்லை என்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி டி.ஐ.ஜி-யிடம் அளித்த புகாரின் பேரில், வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்டம் புதூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
புதூர் காவல் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, மதுரையில் பதுங்கியிருந்த சுமேஷை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

