ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் நுழைவாயில் முன் மண்டபத்தில் இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் புதுக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சக்திகுமார் (28). திருநெல்வேலியில் உள்ள ஒரு கடையில் பணிபுரிந்து வந்த இவருக்கு மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த சக்திகுமார், அடிக்கடி மது அருந்தும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் நுழைவாயில் முன் மண்டபத்தில் சக்திகுமார் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் மகேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இளைஞர் சக்திகுமார் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துச் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

