ஆந்திர மாநிலம் நரசாபூரில் இருந்து தூத்துக்குடிக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும் சிறப்பு இரயிலில், கடந்த சில வாரங்களாகக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக இரயில்வே காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
திருச்சி இரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின் பேரில், திருநெல்வேலி சந்திப்பு இரயில்வே தனிப்படைப் போலீசார் அந்த இரயிலில் திடீர் சோதனை நடத்தத் திட்டமிட்டனர். நரசாபூரில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி நோக்கி வந்த சிறப்பு இரயிலில், சாத்தூர் - மணியாச்சி இரயில் நிலையங்களுக்கு இடையே ரோந்து சென்ற உதவி ஆய்வாளர் பெருமாள், காவலர்கள் மாரித்துரை, கருப்பசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுப் பெட்டியில் உரிமையாளரின்றி சந்தேகத்திற்கிடமான வகையில் கிடந்த நீல நிறப் பையைச் சோதனையிட்டதில், 5 மூட்டைகளில் சுமார் 10.5 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாகக் கஞ்சாவைப் பறிமுதல் செய்த இரயில்வே போலீசார், கஞ்சாவைக் கடத்தி வந்த நபர்கள் யார், எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

