மக்களை நாடி, அவர்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் அரசு அறிவித்துள்ள 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி ஒட்டப்பிடாரம் வட்டத்தில் தங்கி கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.
ஒட்டப்பிடாரம் வட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலகங்கள் மற்றும் செயல்படுத்தப்படும் அரசுத் திட்டங்கள் குறித்து அன்றைய தினம் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. செப்டம்பர் 16-ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொள்கிறார்.
மாலை 3.30 மணி முதல் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு நடத்தி, முற்பகலில் மேற்கொள்ளப்பட்ட களப்பயணங்கள் மற்றும் அலுவலக ஆய்வுகள் குறித்துக் கேட்டறிவார். தொடர்ந்து, நகர்ப்புற மற்றும் கிராம ஊராட்சிகளுக்குச் சென்று பல்வேறு அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மதிப்பாய்வு செய்யவுள்ளனர்.
மறுநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி அதிகாலையில் குடிநீர், சுகாதாரம், தூய்மைப் பணிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆட்சியர் நேரடியாக நேரில் ஆய்வு செய்கிறார்.
மக்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று சேவை அளிக்கவும், கள ஆய்வின் போது கண்டறியப்பட்ட அவ்வட்ட மக்களின் தேவைகள் குறித்த முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்பி வைக்கவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, ஒட்டப்பிடாரம் வட்டாரப் பொதுமக்கள் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாமில் பங்கேற்று, தங்களது வாழ்விட முன்னேற்றத்திற்குத் தேவையான கருத்துகளையும் கோரிக்கை மனுக்களையும் வழங்கிப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

