தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையான மற்றும் சுகாதாரமான சூழலை உறுதி செய்யும் வகையில், திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறி பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்கள் மற்றும் உணவகங்களுக்கு மொத்தம் ரூ.5,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் பொது இடங்கள், முக்கிய சாலைகள், உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் தீவிர கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகக் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி (06.09.2026) நடத்தப்பட்ட சோதனையில், விதிமீறல்களில் ஈடுபட்ட 3 இடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது:

பொது இடத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் இருந்த 'ஆன்லைன் ஷாப்பிங்' முகவரியை வைத்து ஆய்வு செய்து, குப்பை கொட்டிய வீட்டின் உரிமையாளரைக் கண்டறிந்து அவருக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடத்தில் கழிவுகளைத் திறந்தவெளியில் கொட்டிய ஸ்ரீமதி டிபன் சென்டர் கடை உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

உணவுக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளைப் பொது இடத்தில் கொட்டிய சிற்றுண்டி கடை உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளில் கிடைக்கும் ரசீதுகள், முகவரிகள் மற்றும் பொருட்களை வைத்து, குப்பையை உருவாக்கிய நபர் அல்லது நிறுவனத்தை அடையாளம் காணும் புதிய நடைமுறையை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. "குப்பையை உருவாக்குபவரே அதனை முறையாக மேலாண்மை செய்ய வேண்டும்" என்ற பொறுப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உருவாகும் கழிவுகளை மக்கும் கழிவு, மக்காத கழிவு, சுகாதாரக் கழிவு, சிறப்பு கவனக் கழிவு என முறையாகப் பிரித்து, வீடு தேடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

பொது இடங்களில் குப்பை கொட்டுவது, திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பது மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால் கடுமையான அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை தொடரும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.