தூத்துக்குடி பதிவு மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் காலியாக உள்ள சார்பதிவாளர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்பி, பத்திரப்பதிவுப் பணிகளில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் முக்கியத் துறைகளில் பத்திரப்பதிவுத் துறையும் ஒன்றாகும்.
லஞ்சம் மற்றும் முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருகையில்லாப் பத்திரப்பதிவு முறை வரவேற்கத்தக்கது. எனினும், தானம், செட்டில்மென்ட், அடமானம் உள்ளிட்ட பல்வேறு வகையான பத்திரப்பதிவுகளுக்குப் பொதுமக்கள் நேரடியாகப் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வர வேண்டிய சூழலே நிலவுகிறது.
தூத்துக்குடியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மொத்தம் 4 பதிவு மையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 3 மையங்களில் நிரந்தர சார்பதிவாளர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது உதவியாளர் நிலையில் உள்ள ஊழியர்களுக்குப் பொறுப்புச் சார்பதிவாளர் பணி வழங்கப்பட்டுப் பத்திரப்பதிவுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் எந்த நாளில் யார் பொறுப்புச் சார்பதிவாளராக வருவார் என்று தெரியாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மேலும், ஆவண ஆய்வுகளிலும் பத்திரப்பதிவுப் பணிகளிலும் கடுமையான காலதாமதம் ஏற்படுவதால், சொத்து வாங்குவதற்காகப் பணம் செலுத்திய பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி பதிவு மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தூத்துக்குடி பதிவு மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் காலியாக உள்ள சார்பதிவாளர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப வேண்டும். பொதுமக்கள் தாமதமின்றிப் பத்திரப்பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாநகரக் குழு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

