'உயிர் மூச்சு' திரைப்படத்தை தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதாகக் கூறி ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாகத் திரைப்பட இயக்குனர் மற்றும் கோவை விநியோகஸ்தர் மீது, அத்திமரப்பட்டியைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஜோதிமணி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜோதிமணி என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி 'உயிர் மூச்சு' என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் பிராட்வே சுந்தர் இயக்கியுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம், தூத்துக்குடியில் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் பிராட்வே சுந்தர் மற்றும் கோவையைச் சேர்ந்த 'சில்வர் பிக்சர்ஸ்' விநியோகஸ்தர் முரளி ஆகிய இருவர் மீதும் தயாரிப்பாளர் ஜோதிமணி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "நான் தயாரித்த 'உயிர் மூச்சு' திரைப்படத்தை தமிழகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடுவதாகக் கூறி, இயக்குனர் பிராட்வே சுந்தர் மற்றும் விநியோகஸ்தர் முரளி ஆகியோர் என்னிடம் இருந்து ரூ. 28 லட்சம் பெற்றனர். ஆனால், வாக்குறுதியளித்தபடி திரையரங்குகளில் வெளியிடாமல் பணத்தை மோசடி செய்துவிட்டனர்.
சினிமாவில் நடிக்கவும், படம் தயாரிக்கவும் ஆர்வமுள்ளவர்களிடம் இதே போன்று ஆசைவார்த்தை கூறி இவர்கள் தொடர்ந்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார். இப்புகார் தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

